மற்ற மற்ற கட்சிகள் மாநாடு நடத்தித் தீர்மானங் களை நிறைவேற்றுவதற்கும், திராவிடர் கழகம் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் அடிப்படை யிலே வேறுபாடு உண்டு.
அடிப்படைப் பிரச்சினைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் சூறாவளியாக இருக்கக்கூடியவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்.
சமூகத்தைப் பீடித்த பெருநோய் ஜாதி என்பதை மறுக்கவும் முடியுமா? மனித சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் கூறுபோட்டு, மாண்புக்குரிய மனிதத்தை - பகைப் புலமாக மாற்றிக் கேட்டினைச் செய்தது ஜாதிதானே!
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்ற கொடுமை - மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாமா என்ற கேள்வியை எழுப்புவது திராவிடர் கழகம்தானே!
மனித சக்தி ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சிக்குப் பயன்படுவதற்குப் பதிலாக திசை திருப்பி, ஒருவருக்கொருவர் மோதலை உண்டாக் குவது எவ்வளவுப் பெரிய கேடு!
இந்தச் சமூகம் சீர்குலைந்து போனதற்கும், வறுமைக்குழியில் வீழ்ந்ததற்கும் முக்கிய காரணமே இந்த ஜாதி முறை சமூக அமைப்புதானே!
வறுமைக்கோட்டுக்குக் கீழே பெரும் அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆளாக்கப்பட்டதற்குக் காரணம், பிறவியின் அடிப்படையில் அவர்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்பட்டதுதானே!
இந்தத் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டாமா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வெறும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று எழுதி வைத்ததால் மட்டும் தீண்டாமை ஒழிந்துவிடுமா?
தீண்டாமை என்பது ஜாதியின் விளைவுதானே! ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்துவது போல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று திருச்சி திராவிடர் எழுச்சி மாநாடு (9.11.2013) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜாதி ஒழிக்கப்பட்டால் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் என்ற நிலைப்பாடும் நிர்மூலம் ஆகிவிடாதா?
கல்வி, வேலை வாய்ப்பில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாமா? இது ஜாதியை வளர்க்காதா? என்று ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாசு கட்டி முண்டா தட்டும் பேர்வழிகள், சட்ட ரீதியாக ஜாதி ஒழிக்கப்படுவதற்குக் கைதூக்கட் டுமே பார்க்கலாம்.
இதுபற்றி 70 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கருத்துக் கூறி இருக்கிறார் என்றால், சிலருக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம்.
சட்டத்தின்மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது, சட்டத்தின்மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்து விடுவது சிரமமான காரியமல்ல (திராவிட நாடு, 30.5.1943) என்று கருத்துக் கூறியுள்ளாரே!
இன்னும் தேநீர்க் கடைகளில் இரண்டு தம்ளர் கள், இன்னும் ஜாதி அடிப்படையில் சுடுகாடுகள், ஜாதியின் அடிப்படையில் திருமணங்கள் என்கிற மனிதத்துவத்திற்கு விரோதமான நடவடிக்கை களை அனுமதிப்பது கேவலம் அல்லவா? மனிதன் பகுத்தறிவுவாதி என்ற அடையாளத்துக்கு இது அழகல்லவே!
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மற்ற மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தீர்மானம் கொண்டு செல்லுவதைவிட தமிழ்நாட்டிலிருந்து செல்லுவது தானே சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.
காரணம், இங்குதானே சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திக் காட்டினார். பத்தாயிரக் கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர்.
திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டின் இந்தத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் கட்சிகளைக் கடந்து சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment