Wednesday, November 13, 2013

மனிதனிலிருந்து குரங்குக்குப் போகலாமா?

- மின்சாரம்

1952ஆம் ஆண்டிலேயே ஜாதி அடிப்படையில் ஜாதிக் கட்சிகள் தேர்  தலில் குதித்ததுண்டு. அது என்னா யிற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.
கட்சித் தாவலை முதன் முதலாக ஊக்குவித்தவர் ஆச்சாரியார் (ராஜாஜி) சிலருக்கு அமைச்சர் பதவிகளை அளித்து ஜாதிக் கட்சிகளை விழுங்கி விட்டார்.
தேர்தல் நேரத்தில் அவ்வப் பொழுது ஜாதீயவாதிகள் தலை தூக்கிப் பார்ப்பதுண்டு; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது செல்லுபடியாக வில்லை. தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் நிராகரித்து வந்தனர்.
தந்தை பெரியார் என்னும் மகத்தான புரட்சியாளர் தோன்றி மக்கள் மனதில் ஆழப் பதிந்திருந்த ஜாதீய உணர்வினை விவாதப் பொரு ளாக்கினார். பிரச்சாரப் பெரு வெள்ளம் எங்கும் கரை புரண்டு ஓடியது.
மாநாடுகள் - அவற்றின் தீர்மானங் கள் மக்களைப் புது சிந்தனைத் தடத்திற்கு கைகோர்த்து அழைத்து வந்தன.
காங்கிரசில் தந்தை பெரியார் இருந்தபோது அன்றைய மும்மூர்த்தி களை நாயுடு, நாயக்கர், முதலியார் என்றே அழைக்கப்பட்டனர்.
1927ஆம் ஆண்டோடு அந்த நாயக்கர் பட்ட வாலை அறுத்தெறிந்தார் அறிவுலக ஆசான் பெரியார் அவர்கள்.
1929இல் செங்கற்பட்டில் பெரியார் கூட்டிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிவது என்ற தீர்மானம் வெறும் எழுத்தில் மட்டு மல்ல; அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டத்தைத் துறக்க முன்வந்து உறுதிமொழி எடுத்தனர்.
மாநாட்டுக்குத் தலைமை வகித்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டிய நாடார் வெறும் சவுந்தர பாண்டியன் ஆனார். சிவகங்கை இராமச்சந்திர சேர்வை வெறும் இராமச்சந்திரன் ஆனார்.
விருதுநகர் வி.வி.இராமசாமி நாடார் வெறும் இராமசாமி ஆனார். அந்த மாநாட்டின் உந்து சக்தி ஊரெல்லாம் பரவியது -_ வீடெல்லாம் ஜாதி ஒழிப்பு விளக்கை ஏற்றி வைத்தது.
அதன் வீச்சை இன்று வரை காணலாம். பெயருக்கு பின் ஜாதிப் பட்டம் போடுவதை வெட்கக் கேடாகக் கருதும் ஒரு மனப்பான்மை தமிழ்நாட்டில் மட்டும் பூத்துக் குலுங்குகிறது என்றால் அதற்குக் காரணம் _ பகுத்தறிவுப் பகலவனும் அவர்கள் கண்ட தன்மான இயக்க மான சுயமரியாதை இயக்கமும் தானே. பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்து அந்த இடத்தில் கல்விப் பட்டம் வந்த காட்சி என்பது சாதாரணமானது தானா? தலைகீழ் மாற்றத்தின் மலர்ச்சியல்லவா!
இந்தியாவின் மற்ற மற்ற பகுதிகளில் நிலைமை என்ன? பொதுவுடைமை பேசும் காம்ரேடுகள் கூட ஜாதி வாலை அறுத்துக் கொள்ள முடியாத அவல நிலையில்தானே உள்ளனர்.
ஈ.எம்.எஸ். சங்கரன் என்றால் யாருக்குத் தெரியும்? நம்பூதிரிபாட் என்றால் தானே புரியும்!
சோமநாத் சட்டர்ஜி, ஈ.கே. நாயனார், அச்சுதமேனன், ஹிரேன் முகர்ஜி, புத்ததேவ் பட்டாச்சார்யா என்று தானே வலம் வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்தப் பெரும் புரட்சிக்குப் பொதுவுடைமை வாதிகள்கூட உரிமை கொண்டாட முடியாதே!
இந்த நிலையில் இன்று சிலர் புறப்பட்டுள்ளனர்; இலட்சியமும், சித்தாந்தமும், வறுமைப்பட்ட நிலை யில், ஜாதி பிச்சைப் பாத்திரத்தை எடுத் துக் கரையேறலாமா, கையேந்தலாமா என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
அதுவும் எப்படி? தாழ்த்தப்பட்ட வர்களைத் தனிமைப்படுத்தும் ஜாதி கூட்டணியாம்!
ஜாதியை எந்த நோக்கத்தின் அடிப் படையில் ஆரியம் உருவாக்கிற்றோ, அதனை நிறைவேற்றிக் கொடுக்க கொஞ்சமும்கூட வெட்கமின்றி துடியாய்த் துடிக்கிறார்களே!
இவர்கள் ஒரு காலத்தில் பெரி யாரை மூச்சுக்கு முந்நூறு தடவை உச்சரித்தவர்கள்; ஏன், ஒரு கட்டத்தில் கறுப்புச் சட்டைக்கூட போடச் சொன்னவர்கள்!
அட சந்தர்ப்பவாதமே _- உன்னை எந்தப் பெயர் சூட்டி அழைக்க!
நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன்.
அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது. இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்ப தற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்தி லிருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான்  கி,ஙி,சி,ஞி யாகக் கொண்டேன், - கொள்கிறோம், ஆனதி னாலேயே தான் நான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல் லாமல் நானும் வகுப்புவாத உருவ மாகவே இருந்து வருகிறேன். (விடுதலை 5.3.1969).
என்று தன்னைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்கிறார் தந்தை பெரியார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இன்றைக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 89 சதவீதத்தில் பார்ப்பனர் அல்லாதார் படிக்கின்றனர் என்று துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் சொன்னார் என்றால் - அன்று தந்தை பெரியார் கி,ஙி,சி,ஞி யாகக் கொண்ட அந்தப் பார்ப்பன எதிர்ப்புதான் என்பதை மறக்க வேண்டாம்?
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற அப்பட்டமான சூழ்ச்சியை தந்தை பெரியாரும், பிரதமர் பனகல் அரசரும் தகர்த்து எறிந்திருக்கா விட்டால் டாக்டர் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை டாக்டர் அய்யா சிந்திக்க வேண்டாமா?
பார்ப்பானைத் தவிர்த்துப் பார்ப்பனர்அல்லாதாரை ஒன்று திரட்டினார் -_ அதன் காரணமாக அடித்தட்டில் குப்புற வீழ்ந்து கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் -_ அதற்கு அடுத்த நிலையிலிருந்த பிற்படுத்த ப்பட்டோர்கள் விழித்தெழ முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?
தீவிர சிகிச்சை பிரிவில்  யாரை வைப்பது, பொது வார்டில் யாரை வைப்பது? என்பது ஒரு டாக்டருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
சமுதாயத்தின் நயவஞ்சக வருணாசிரமம் என்னும் நஞ்சினாலே ஊருக்கு ஒதுக்குப்புறம் விரட்டப்பட்டு பள்ளன் என்றும், பறையன் என்றும் ஆக்கப்பட்டார்களே, அவர்கள் யார்? நம் மக்கள் அல்லவா? சகோதரர்கள் அல்லவா? ஒரே ரத்தம் அல்லவா? நம் இனத்தவர் அல்லவா?
அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்டதற்குக் காரணமானவர்களான பார்ப்பனர்களை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சு வது என்றால் இதனை வரலாறு மன்னிக்குமா?
நேற்றுவரை பார்ப்பனர்களை இவர்கள் எப்படி விமர்சித்தனர்? எங்கள் கட்சியில் பார்ப்பனரை சேர்க்க மாட்டோம் என்ற உறுதி என்னா யிற்று?
கேள்விகள் ஏராளம் உண்டு _ காலத்தின் முன்னின்று மண்டியிட்டுப் பதில் சொல்லியே தீர வேண்டும்.
45 ஜாதிகளை இணைத்து சமு தாயக் கூட்டணியை உருவாக்கிய தாகக் கூறப்பட்டது.
அதையாவது அவர்களால் கட்டிக் காக்க முடிந்திருக்கிறதா? கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் பெஸ்ட் ராமசாமி அவர்களை கொண்டு தேசிய சமுதாயங்களின் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டிக் கொண்டு விட்டனர் _ இன்னொரு பகுதியினர்.
இந்தக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களுள் ஒருவர் அர்ஜுன் சம்பத் அவர் என்ன சொல்லுகிறார்? சில தலைமுறைகள் முன்புவரை பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பிரிவு உருவாக்கப்பட்டி ருந்தது. இப்போது தர்மபுரி சம்பவத்துக்குப் பிறகு, தலித், தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை ஏற்படுத்தி விட்டார் ராமதாஸ். ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் இல்லாமல் இந்து சமயம் இல்லை - என்று கூறுகிறார்.
(தமிழக அரசியல் 23.10.2013 பக்கம் 421)
இந்தக் கூட்டணியில் உள்ள தேவர் தேசிய பேரவைத் தலைவர் திருமாறன் என்பவரோ தேசிய அமைப்பாளர் அர்ஜுனன் சம்பத் கூறும் கருத்தினை மறுக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரி லான கட்சிகளின் அட்டூழியத்தால் வட தென் தமிழ்நாட்டு மக்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்ஜுன்  சம்பத்தின் கருத்தை மறுக் கிறார். ஏற்காடு தேர்தலில் அ.தி. மு.க.வை ஆதரிக்க தேசிய சமூக கூட் டமைப்பு முடிவு என்று இன்னொரு செய்தி (தினமலர் 17.10.2013 பக்கம் 11)
மருத்துவர் ராமதாஸோ நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இரு கட்டமாக அறிவித்து விட்டார். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதில்தான் குறியாக இருக் கிறார்கள்.
குரங்கிலிருந்து மனிதன் என்கிற பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்! மனிதனிலிருந்து குரங்காக மாறும், தேய்மானம் அடைய ஆசைப்படுவது பரிதாபமே!
பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் ஜாதிக் கூண்டுக்குள்தான் தன் சுதந்திரம் இருக்கிறது என்று நினைப் பவர்களைப் பற்றிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒன்று மட்டும் உறுதி; 45 கட்சிகள் கூட்டணி அளித்தாலும் சரி, 450 கட்சி களைக் கொண்ட மகா கூட்டணி வைத்தாலும் சரி- _ இவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனிய சாஸ்திர சம்பிர தாயப்படி, ஏன் இன்றைய அரசமைப் புச் சட்டத்தின்படியேகூட சூத்திரன் தான் என்பதை மறக்க வேண்டாம்.
பக்கத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கிறார்களே பார்ப்பனர்களை - _ அவர்கள் முதுகில் தொங்கும் பூணூலுக்கு என்ன பொருள்?
உங்களைப் பார்த்து சூத்திரர்கள் என்று தானே அந்தப் பூணூல்கள் நமட்டுச் சிரிப்பை உமிழும்.
தமிழன் கட்டிய கோயிலிலே -_ தமிழர்கள் வாழும் _ வீதிகளிலே உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்ச களாக முடியாது -_ காரணம் தமிழர்கள் எல்லாம் சூத்திரர்களாம்.
இந்த இழிவை ஒழிக்க உணர்ச் சியில்லை. கேவலம் இரண்டு பதவித் துண்டுகளுக்காகப் பார்ப்பனியத்திடம் பலியாகலாமா?
பெரியாரைப் படித்தது இதுதானா?
புரிந்து கொண்டது இதுதானா?
அரசியலையும், பதவியையும் பெரியார் ஏன் வெறுத்தார் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா!

No comments:

Post a Comment