சென்னை நகரை முதன் முதலாக 1867இல் 8 வார்டுகளாகப் பிரித்தார்கள். நகரில் குடியிருப்பவர்களிலிருந்து இரண்டு வார்டுகளுக்கு ஒருவர் வீதம் நான்கு கமிஷனர்களை நியமித்தனர்.
1878இல் 16 வார்டுகளுக்கு 32 கமிஷனர்கள் நியமிக்கப் பட்டார்கள். இவர்கள் நியமனம் வரி செலுத்துவோரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதாய் இருந்தது.
1919இல் வார்டுகள் டிவிஷன்களாக மாறின. நியமன கமிஷ னர்கள் கவுன்சிலர்களாக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு சென்னை நகரம் 1947இல் 50 வட்டங்களாகவும், (டிவிஷன்கள்) 1961இல் 100 வட்டங்களாகவும், 1967இல் 120 வட்டங்களாகவும், இன்று 155 வார்டுகளாகவும் மாறி உள்ளன.
இப்போது டிவிஷன், வட்டம் என்று சொல்லாமல் வார்ட என்றே மீண்டும் குறிப்பிடுகிறார்கள். டி.எம். நாயர் அவர்கள் நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றிய காலம் வரை நகராட்சி, உறுப்பினர் பொறுப்பைக் கமிஷனர் என்றே கூறி வந்தனர்.
டாக்டர் நாயர் நகராட்சிப் பொறுப்பி லிருந்து விலகியதற்குப் பிறகு மனமாற்றம் ஏற்படக் கூடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. டில்லி இம்பீரியல் சட்டமன்றத்துக்கு 1915ஆம் ஆண்டு சென்னைச் சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இப்பொறுப்புக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பினார் டாக்டர் நாயர். இந்த விருப்பத்தை தமது நண்பர்களிடம் தெரிவித்தார். டாக்டர் நாயரும் தேர்தலில் ஈடுபட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இறுதியில் டாக்டர் நாயர் தோல்வி அடைந்தார். அவருக்கு நான்கே வாக்குகள் கிடைத்திருந்தன. இத்தோல்விதான் நாயரின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பிட்டி தியாகராயருக்கு வேறொரு வகையான அனுபவம் கிடைத் தது. பிட்டி. தியாகராயர் எவ்வளவுதான் சமூக நிலையில் உயர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பனர் ஒருவர் மேடைமீது ஏற்றாமல் சிறுமைப்படுத்தி, கீழே நாற்காலி போட்டு அமர வைத்து விட்டார். இத்தனைக்கும் அந்தப் பார்ப்பனர் அவரது அலுவலகத்தில் அவருக்குக் கீழே ஊதியம் பெறுபவராக இருந்தார்.
பார்ப்பனர் அல்லாதவராகப் பிறந்து விட்டார் என்பதற்காகவே சமூக நிலையில் தம்மைப் பார்ப்பனர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. பிட்டி தியாகராயர் கடவுள் நம்பிக்கை உடையவர்.
(திராவிட இயக்கம் தொகுதி - 1 நீதிக்கட்சி வரலாறு க. திருநாவுக்கரசு பக்கம் 163)
- க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி
No comments:
Post a Comment