கருத்துரிமை: ஒருவனுடைய எந்தக்கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்ப தற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
பேராசை - நாணயம்: பேராசை யில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒருகாலமும் நம்ப மாட்டான்; பின்பற்றமாட்டான்.
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள்.
அறிவுக்கு முதலிடம்: உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழி காட்டி; அதை நல்ல முறையில் பயன் படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக் கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன் னோர் சொல்லிப் போனது அற்புத மல்ல, அதிசயமுமல்ல, அதை அவர் களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந் தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய், அறிவுக்கே முதலிடம் கொடு.
நமக்கு வேண்டியது என்ன? : தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை.
படிப்பு எப்படி இருக்க வேண்டும்? : நமது கல்விமுறை மாற வேண்டும், படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தி னாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.
பெண் அடிமையாவது ஏன்? : ஒவ்வொரு பெண்ணும் - தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக் குப் போதுமான அளவாவது சம் பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.
வாலிபர்கள் கவனிக்க : வாலி பர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தி யம், அசாத்தியம், அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன் மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.
ஜாதியும் - ஒழுக்கமும் : மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான், இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் - நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
No comments:
Post a Comment