தந்தை பெரியாரின் தொண்டர்க்கெல்லாம் தொண்டர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர், `பெரியாரின் கருத்துகளைத் திரிக்கும் மனிதர்களிடமிருந்து பெரியாரை காப்பதுதான் எங்கள் தலையாய பணி என்று சொன்னார். பொதுவாக பத்திரிகைகளில் எழுதும் அரசியல் துறையில் ஈடுபடுவோர், தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ள தலைவர்கள் தொடர்புடைய சம்பவங்களை எழுதுவதுண்டு. அப்படி எழுதும்போது பொறுப்புணர்ந்து எழுதுவதைவிட தம்மை முன்னிலைப்படுத்தும் நோக்கமே தலைதூக்கிவிடுகிறது. இந்த வகையைச் சேர்ந்த ஒரு அரசியல் எழுத்தாளர் அண்மையில் எழுதிய முற்றிலும் உண்மைக்கு மாறான ஒரு கருத்து, தந்தை பெரியார் மீதான மரியாதையைக் குறைப்பதாக அமைந்துவிட்டது. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் காலில் தந்தை பெரியார் அவர்கள் விழுந்ததாக தவறான ஒரு தகவல் திட்டமிட்டு வலைத்தளங்களிலும் முகநூலிலும் பரப்பி விடப்படுகிறது.
1967--_68 ல் திருச்சியில் நடைபெற்ற
பெரியார் பிறந்தநாள் நிகழ்வின்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறுகிறார்கள்.
அடிகளாருக்கு பெரியார் மீதான மதிப்பீட்டை நாம் முதலில் அறிந்து கொள்வது
அவசியம். அடிகளார் தனது கட்டுரைகளில் பெரியாரை பற்றி குறிப்பிடும்
பொழுதெல்லாம் தலைவர், தமிழர் தலைவர், தமிழினக்காவலர், வழிவழி தலைமுறைத்
தலைவர் என்றுதான் எழுதுகிறார். அவர் மேடைகளில் பேசும்பொழுதும் இந்த
சொற்களையே பயன்படுத்தியிருக்கிறார்.
அடிகளாரால் தலைவர் என்று அழைக்கப்படும்
பெரியார், "ஒரு மனிதன் காலில் மற்றொருவன் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு"
என்று தன்வாழ்நாள் முழுதும் பரப்புரை செய்த பெரியார், அடிகளார் காலில் விழ
வாய்ப்பு இருக்கிறதா என்று சில நொடிகள் சிந்தித்திருந்தாலே
தெரிந்திருக்கும்! இது புரட்டர்களின் பொய் மூட்டை என்பது
புரிந்திருக்கும். அடிகளாரைப்பற்றி பெரியார் எழுதுகிறார்:
"சைவர்கள் நெற்றியில் விபூதி
பூசிகொள்வதுதான் பக்தர்களின் இன்றிய மையாத கடமை என்பார் கள். வைஷ்ணவர்கள்
நெற்றி யில் நாமம் போட்டுக் கொள்வதுதான் பக்கதர் களின் இன்றியமையாத கடமை
என்பார்கள். பகுத்தறிவு வாதிகளோ இவை இரண்டையும் பார்த்து சிரிப்பார்கள்.
மனித சமுதாய நல்வாழ்வுக்கும்
வளர்ச்சிக்கும் மதம் ஒரு முட்டுக்கட்டை என்று கருதுகிறவர்கள்
பகுத்தறிவுவாதிகள். சிரிப்பதைப்பற்றி கவலைப் படாமல் தங்களால் முடிந்த
அளவுக்கு பகுத்தறிவுவாதிகளை அனுசரித்து ஆதரித்து பயன்படுத்திக்கொள்வர்கள்
சிலர். அக்குழுவில் சேர்ந்தவர்கள்தாம் நம் பணிவுக்கும் போற்றுதலுக்கும்
உரிய குன்றக்குடி மகா சன்னிதானமாவார்கள்.
அதாவது சர்க்கஸ் வளையத்தில் சிங்கமும் ஆடும் எப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விளையாட்டுக் காட்டி ஒன்றை ஒன்று சுமக்கிறதோ, அது போலத்தான் ஒன்றுக்கொன்று, பரிகாசம், வெறுப்பு, எதிர்ப்புக்கொள்ளக்கூடிய பகுத்தறிவும் மதமும் குலவுவதுமாகும்.
சிங்கத்துக்கும் ஆட்டுக்கும்
ஒற்றுமைக்குக் காரணம் சர்க்கஸ் மாஸ்டரின் சவுக்கடிதான். அதுபோல மதமும்
பகுத்தறிவும் ஒன்றுபட்டுக் குலவக்காரணம் மக்கள் நலமும் வளர்ச்சியும் தாம்.
ஆகவே இதில் ஒன்றும் அதிசயம் இல்லை.

அய்யா மகாலிங்கம் அவர்கள் ஆர்வத்தோடு தன்கைப்பட கடிதம் எழுதி தந்தார்கள். அந்தச் செய்தி வருமாறு:
1967ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள்
தந்தை பெரியார் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் திருஉருவச் சிலை
திறப்பு விழாவும் திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
அவ்விழாவில் தமிழக முதல்வர் அண்ணா,
சபாநாயகர் சி.பா.ஆதித்தனார், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், கல்வி வள்ளல்
காமராசர், ராஜா சர் முத்தய்யா (செட்டியார்) மற்றும் பல பிரமுகர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நான் தந்தை பெரியாரின் உதவியாளனாகவும்,
விடுதலைக்கு செய்தி அனுப்புபவனாகவும், எப்போதும் அய்யா அவர்களின் அருகிலேயே
இருக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவனாக இருந்தவன்.
தவத்திரு அடிகளார் அவர்கள் வருகை தந்தபோது
தந்தை பெரியாரவர்கள் தள்ளாடியபடி எழுந்து இருகரங்களைக் கூப்பி வணங்கி,
வரவேற்று அமரச் செய்தார்கள். அவர் காலில் விழுந்து வணங்கினார் என்பது
உண்மைக்கு மாறுபட்ட செய்தியாகும். இந்த விஷமத்தனமான செய்தி வண்மையாகக்
கண்டிக்கத்தக்கதாகும். 1968இல் நடைபெற்ற தந்தை பெரியாரின் 90ஆவது
பிறந்தநாள் விழாவும் நிறுவனர் நாள் விழாவும் திருச்சி பெரியார் மாளிகையில்
நடைபெற்றது. அதிலும் தவத்திரு அடிகளார் கலந்து கொண்டார். அப்பொழுதும் அவர்
காலில் விழவில்லை. -_ தி.மகாலிங்கம், 25.6.2012
தந்தை பெரியாரின் நிகழ்ச்சிகள்
ஒவ்வொன்றும் வெட்டவெளியில் பல ஆயிரம் மக்கள் முன்னிலையிலேயே நடக்கும்.
அய்யாவைத் தனிப்பட்ட முறையில் யார் சந்திக்கச்சென்றாலும் அவரைச் சுற்றி
கருஞ்சட்டைத் தொண்டர்கள் பலர் இருப்பதே வழமை.அதுவும் இறுதிக்காலத்தில் உடல்
நலிவுற்று சிரமப்பட்டு வந்த நிலையில் ஒரு சிலராவது உதவிக்கு உடன்
இருப்பார்கள். மேற்சொன்ன நிகழ்ச்சியின்போதும் பல பெரியார் தொண்டர்கள் உடன்
இருந்தனர். அவர்களில் மிக அருகில் இருந்தவர் ஒருவர் தி.மகாலிங்கம்.
அவர்தான் இந்த மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறை இணையத்தில் சொல்லப்படும்
எந்தச் செய்தியையும் உடனே பல நூறுபேர்களுக்குப் பகிரும் பணியில் ஈடுபட்டு
வருகிறது. அப்படி இருக்கும் போது இதுபோல பொறுப்பற்று எதையாவது எழுதுவது
பெரியார் பெயரை உச்சரிப்பவர்களுக்கு அழகல்ல. நாம் உடனடியாக இணையத்தில் இந்த
மறுப்பை ஆதாரங்களுடன் வெளியிட்டதால் அய்யா மீதான அவதூறுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நன்றி:- கி. தளபதிராஜ்
(உண்மை இதழ்)
No comments:
Post a Comment