Friday, November 22, 2019

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா? நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

*திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை*

பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா?

நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்?

*இரத்தம் கொதிக்கவில்லையா?*

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம். நாடாளுமன்றத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களே, என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? இரத்தம் கொதிக்கவில்லையா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய நீட் பீஜி தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

*பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாதாம்!*

அதில் மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்படவேண்டும். ஆனால், மத்திய அரசோ அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்களில் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர்வதால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்காமல் போகும்.

உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் ‘பம்பர்’ பரிசா?

ஆனால், இதே ஆணையில் 10 சதவிகிதம் உயர்ஜாதியில் ஏழையினருக்கு (EWS) மொத்தமுள்ள 15,387 இடங்களிலும்  இடம் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உயர்ஜாதியினருக்குத் தனியாக மேலும் பொதுப் பிரிவில் உள்ள 7,693 இடங்கள் போக, 1,538 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 27 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதால், வெறும்  300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இழப்பு 3,800 இடங்கள். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் - கொடுமையிலும் கொடுமையாகும்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களை எடுத்துச் சென்று, அந்த மாநிலத்தின் பெரும்எண்ணிக்கைவாசிகளான பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மாநில அரசு என்ன செய்துகொண்டுள்ளது? பா.ஜ.க.வுக்கு பஜனை பாடவே நேரம் போதவில்லையா? கண்டிக்கத்தக்கது.

உயர்ஜாதியினருக்கு மட்டும்
சட்ட விரோதமாக பம்பர் பரிசா?

இவ்வளவுக்கும் மக்கள் தொகையில் மிகவும் அதிகமானவர்கள் பிற்படுத்தப்பட்டோரே! (மண்டல் குழு அறிக்கைப்படி 52 விழுக்காடு) ஜனநாயகப்படி பெரும்பான்மையான மக்களுக்குரிய உரிமை வழங்கப்படுவதற்கு மாறாக மறுக்கப்படும் கொடூரம்!

*தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு!*

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் சுமார் 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கான இடங்கள் இங்கே;  அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இருந்தபோதிலும், இந்த 1,758 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது 879 இடங்களை மத்திய அரசிடம் கொடுத்து விடுகிறோம். இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாததால் (இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது). சுமார் 450 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களை ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் மருத்துவ இடங்களை இழக்கிறார்கள்.

*உயர்ஜாதியில் ஏழைகள்மீது கரிசனம் பாரீர்!*

அதேநேரத்தில், சட்ட விரோதமான - உச்சநீதிமன்றத்தாலேயே நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலை உயர்ஜாதியில் ஏழை என்பவர்கள்பால் செலுத்தி (10 விழுக்காடு) இடங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

வங்கித் தேர்வில் நடந்தது என்ன?

எடுத்துக்காட்டாக கடந்த ஜூன் மாதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிளார்க் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எப்படி மதிப்பெண் (கட்-ஆஃப் மார்க்) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது?
பொதுப் பிரிவினருக்கு 61.25%
இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் 61.25 %
மலைவாழ் மக்களுக்கு 53.95% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கான கட் ஆஃப் மார்க் என்ன தெரியுமா? 25.5%
நியாயப்படி கல்விக் கூடங்களில் 25.5% மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி  கிடையாது. ஆனால்,  பி.ஜே.பி. என்னும் மனுதர்ம ஆட்சியிலே 61.25% மதிப்பெண் பெற்றால்தான் தாழ்த்தப்பட்டோருக்கு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  தேர்ச்சி. ஆனால், உயர்ஜாதியினருக்கோ கட் ஆஃப் மார்க் வெறும் 25.5 சதவிகிதம்.
மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது இதுதானே!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்யவேண்டும்?

இரத்தம் கொதிக்கவில்லையா? நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?.

மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் இதுகுறித்து நேற்று குரல் எழுப்பியுள்ளது பாராட்டத்தக்கது. நாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த மனுதர்ம சமூக அநீதிக்கு முடிவு கட்டவேண்டும். இதைத் தி.மு.க. உறுப்பினர்களும் முன்னெடுக்கவேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோள்!

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கானது. ஆனால், மனுநீதி பி.ஜே.பி. ஆட்சியிலோ குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களுக்குத்தான் எல்லாமும் என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இனி நாம் என்ன செய்யவேண்டும்? குனிய குனிய குனிந்துகொண்டு இருக்கப் போகிறோமா?

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் எரிமலையாகக் கிளர்ந்து எழுவது எந்நாள்? தந்தை பெரியார் பிறந்த மண்தான் குரல் கொடுக்கவேண்டும் - கொடுப்போம் - நிமிர்ந்திடுவீர், எழுந்திடுவீர்!

*கி.வீரமணி*
*தலைவர்,*
திராவிடர் கழகம்
22.11.2019

Friday, November 15, 2019

சென்னை அய்.அய்.டி.யில் படித்து வந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலையின் பின்னணி என்ன? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை

விசாரணையும் தண்டனையும் தேவை மீண்டும் இந்த அவலங்கள் தொடரக் கூடாது!
சென்னை அய்.அய்.டி.யில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமையான பெண் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதரீதியான துன்புறுத்தல் காரணமாக சென்னை அய்.அய்.டி. (கேரளத்தைச் சார்ந்த) மாணவி பாத்திமா லத்தீப்  தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடந்த 4 நாட்களாக கேரளத்தில் பெரும் விவாதப் பொருளான நிலையில் தமிழகத்தில் தற்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை அய்.அய்.டி யில் முதலாம் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள விடுதி அறையில்  தற்கொலை செய்துகொண்டார். தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்ஷன் பத்மநாபன் தான், தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.
மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதன் காரணமாக அய்.அய்.டி. நடத்திய நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி  முதுகலை மானுடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறைப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறுகையில், "தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர் கோழையாக இருந்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அய்.அய்.டி.யில் ஜாதி - மத ரீதியான பாரபட்சம்!
சென்னை அய்.அய்.டியில் தொடரும் ஜாதி  மற்றும் மத ரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தரப்பினரிடமிருந்து பாத்திமா எதிர்க்கொண்டார் என்றும், தனது பெயர் முஸ்லிமாக இருந்ததே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாகவும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்! என்னே கொடுமை!!
ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும், அதுகுறித்து துறைத் தலைவரிடம் பாத்திமா புகார் அளித்து பின்னர் அது திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் எடுத்துக் காட்டுகிறார்.
தொடர்ச்சியாக சென்னை அய்.அய்.டி வளாகத்தில்  மாணவர்கள் தற்கொலைப் படலம் ஏனோ தொடர்ந்து வருகிறது. பேராசிரியரின் பாகுபாட்டால் இந்த அய்.அய்.டி.  மாணவி தற்கொலை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அய்.அய்.டி. என்றாலே பார்ப்பனர்கள் ராஜ்ஜியம் தானா? மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்படாத அறிவிப்பு அங்கு உள்ளதா?
தகுதி - திறமை பற்றி தம்பட்டம் அடிக்கும் கூட்டம்
தேர்வுகளில் எல்லாம் முதல் மதிப்பெண் எடுத்த பெண்தான் பாத்திமா லத்தீப். தகுதி - திறமை பற்றி தம்பட்டம் அடிக்கும் கூட்டம் - தங்களைத்தவிர மற்றவர்கள் அவர்கள் கூறும் அந்தத் தகுதி திறமை உடையவராக இருந்தால் அதனை ஏற்க மாட்டார்களா? ஜீரணித்துக் கொள்ள மாட்டார்களா?
இது ஒன்றும் புதிதல்ல; அய்.அய்.டி.யிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர் களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சிறு பான்மையினராகவுமே இருப்பது ஏன்? ஏன்?
புதுடில்லி எய்ம்சில் கொல்லப்பட்ட திருப்பூர் சரவணன், தற்கொலைக்குத் தூண்டப்பட்டு பலியான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற சேலம் முத்துக்கிருஷ்ணன், அய்தராபாத் பல்கலைக் கழக ரோஹித் வேமுலா என்று நிறுவனப் படுகொலைக்கு இலக்கானவர்களின் பட்டியல் வருந்தத்தக்க வகையில் நீள்கிறது.
ஜாதி - மத வெறியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது
2007ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரை தாழ்த்தப்பட்ட (S.C.) சமூக மாணவர்கள் 23 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 2008ஆம் ஆண்டு பலியான அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் செந்தில்குமார் வழக்கு இன்னும் தொடக்க நிலையைக்கூட தாண்டவில்லை. சென்னை அய்.அய்.டி.யில் இவ்வாண்டே நான்கு மரணங்கள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன என்று சொல்லப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்கூட நிகழக் கூடாத இத்தகைய மரணங்கள் நடந்ததாகத் தெரிகிறது. ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களும் இத்தகைய நிகழ்வுகளில் பலிகடாக்கள் என்பது இம்மரணங்களுக்குப் பின்னால் உள்ள ஜாதி, மதவெறியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல, "சென்னை அய்.அய்.டி. என்ன மர்ம தேசமா?" ஆர்.எஸ்.எஸ். அக்கிரகார வளையமா?
மத்திய - மாநில அரசுகள் இதனை அலட்சியமாகக் கருதக் கூடாது  - முடியாது. வீண்கெட்ட பெயரைத் தவிர்க்க முயலுங்கள்.
அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய நிலைமை நீடிப்பதற்கான முக்கியமான காரணம், பேராசிரியர், பணியாளர் நியமனங்களில் அங்கு இட ஒதுக்கீட்டின் படி பணியிடங்கள் நிரப்பப்படாதது தான்.
உரிய பிரதிநிதித்துவம் இல்லாமலும், ஆற்றுவார் - தேற்றுவாரில்லாமலும், வழிகாட்டவும், வலியைப் புரிந்து கொண்டு உடன்நின்று குரல்கொடுக்கவும் கூட இயலாமல் தனிமைப்படுத்தப்படும் பயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களே தவிக்கும் நிலையே அய்.அய்டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது.
இரு மடங்கு அளவில் உயர் ஜாதியினர்....
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் படி முழுமையாக நிரப்பப்படுவதும் இப் பிரச்சினைகளைச் சரி செய்வதற்கான முக்கியமான தேவையாகும். பொதுப் போட்டி இடங்களையும் தாண்டி இருமடங்கு என்னும் அளவில் பார்ப்பன-உயர்ஜாதியினர் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் (S.C.) - 1.62%,  பழங்குடியினர் (S.T.) - 0.32%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.) - 9.41%; ஆனால், "உயர்ஜாதியினர்" - 88.3% பணியில் உள்ளனர்.
இணை பேராசிரியர்களில் தாழ்த்தப்பட்ட (S.C.) வகுப்பினர் - 2.2%, பழங்குடியினர் (S.T.) - 0.55%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.)- 10.61%; ஆனால் "உயர்ஜாதியினர்" - 87.15%
துணை பேராசிரியர்களில் தாழ்த்தப்பட்ட (S.C.) வகுப்பினர் - 2.04%,  பழங்குடியினர் (S.T.) -  0.51%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.) - 9.18%; ஆனால் "உயர்ஜாதியினர்" - 86.7%
இப்படி 18 விழுக்காடு இருக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட (S.C.), வகுப்பினர் 2 விழுக்காடு அளவு கூட நிரப்பப்படவில்லை; 7.5% நிரப்பப்படவேண்டிய  பழங்குடியினருக்கு (S.T.) அரை விழுக்காடு கூட பணி வழங்கப்படவில்லை. 27% பெற்றிருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் 10% கூட பணியமர்த்தப்படவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக நிரம்பிய "உயர்ஜாதியினர்" ஏறத்தாழ 87% இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்என்றால், இந்த சமூக நீதி மறுப்பு தானே உயிர்களைப் பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதை மறுக்க முடியுமா?
தமிழ்நாடு அரசு இதற்கு முதன்மையான அளவில் முக்கியத்துவம் கொடுத்து, உரிய முறையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இல்லையெனில் போராட்டம் தவிர்க்கப்பட முடியாததே!
நீண்ட கால நோக்கில்....
நீண்ட கால நோக்கில் இப்பிரச்சினைகளை அணுகி, இனி கல்வி நிறுவனங்களுக்குள் இத்தகைய நிறுவனப்படுகொலைகள், தற்கொலைத் தூண்டுதல்கள், நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறையைக் காணவேண்டும். இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி!
மாணவர்களின் குறைகளை பேசிக் களையவும், மாணவர்களின் குரல்களை எடுத்துரைக்கவும், கல்வி நிறுவனம் - மாணவர் - பெற்றோர் என மூவருக்குமிடையிலான ஜனநாயகப் பூர்வமான தீர்வு மய்யங்கள் இல்லை என்பதே உண்மை. கவுன்சிலிங் மய்யங்கள் கண்துடைப்புக்குச் செயல்படாமல் தீர்க்கமாகப் பணியாற்றுவதும், மாணவர் பிரதிநிதிகள் கல்வி நிறுவனங்களின் குரலாக ஒலிக்காமல், மாணவர் குரலாக ஒலிப்பதும் அவசியம்.

கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15-11-2019

Tuesday, November 12, 2019

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை! -கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

‘நீட்'டை திரும்பப் பெறவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு என்ன பதில்?

நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடுக!
இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கை!
-கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம்
‘நீட்' தேர்வால் பலன் அடைபவர்கள் பணம் கொழுத்தவர்கள்தானா? - ‘நீட்' தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் ‘நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று திரட்டப்பட்டு , வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

‘நீட்' தேர்வால் என்ன நடக்கும் - சமூகநீதி குழிவெட்டிப் புதைக்கப்படும் என்றோம்.

இப்பொழுது அதுதான் நடந்திருக் கிறது.

‘நீட்' தேர்வால் ஏற்பட்ட இழப்புகள்

லட்சம் லட்சமாய் ரூபாய் செலவு செய்து  ‘நீட்' கோச்சிங்கில்  யாரெல்லாம் சேரவில்லையோ அவர்களில் ஒருவர் கூட கீழ்க்கண்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேரவில்லை.

1. தருமபுரி

2. தூத்துக்குடி

3. கோயம்புத்தூர்

4. திருவண்ணாமலை

5. விழுப்புரம்

6. திருவாரூர்

7. செங்கல்பட்டு.

மீதமிருக்கிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிலைமை என்ன?

ஒரு கல்லூரியில் 3 பேர் வீதம் 16 கல்லூரிகளிலும் சேர்த்து வெறும் 48 மாண வர்கள் மட்டுமே ‘நீட்' பயிற்சி வகுப்பு செல்லாமல் மருத்துவப் படிப்பில் சேர்ந் திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள். இந்த  ஆண்டு அரசு பள்ளிகளில்  படித்தவர்களில் ஒருவர் மட் டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனை வரும் தனியார் பள்ளிகளிலும், மருத்துவப் படிப்பிற்காக சிறப்பு வகுப்புகளிலும் சேர்ந்து படித்துள்ளனர்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி களில் மொத்தம் 3081 இடங்கள் உள்ளன.

48/3081 = 1.55 விழுக்காடு. இதுதான் நமக்குக் கிடைத்த விழுக்காடு.

இந்த 48 பேர் போக மீதமுள்ள 3033 பேரும் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து  ‘நீட்' பயிற்சி வகுப்புக்குச் சென்ற வர்கள்.

இப்போது புரிகிறதா தகுதி எது? தரம்  எது என்பது?

2016-2017 இல் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு பல லட்சங்கள் செலவு செய்து நீட் பயிற்சி வகுப்புகளுக்குப் போய்,  ‘நீட்' தேர்வை எழுதி அதில் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போய், 2017-2018 இல் மறுபடியும் பல லட்சங்கள் செலவு செய்து ‘நீட்' பயிற்சி வகுப்பிற்குப் போய், மறுபடி இரண்டாம் முறையாக ‘நீட்' தேர்வு எழுதி, தேர்வாகி 2018  இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 2007 பேர்களாம். என்ன கொடுமையடா இது!

இவர்கள்  2 ஆண்டு ‘நீட்' தேர்வுக்காக பிரத்யேகமாக  ‘நீட்' பயிற்சி மய்யங் களுக்குப் பயிற்சிக் கட்டணம் கொடுத் துள்ளனர்.  அதாவது பிரபல பயிற்சி மய்யங்களுக்குத் தலா ஒரு நபர் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

'நீட்' தேர்வு - பணம் கொழுத்தவர்களுக்காகவா?

‘நீட்'  யாருக்காக - ‘நீட்' பயிற்சி மய்யங் களுக்காகவா?

‘நீட்' யாருக்காக - பணம் கொழுத்த வர்களுக்காகவா?

2016-2017 இல் ‘நீட்' இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் வெறும்  62. ‘நீட்'  வந்த பிறகு பெற்ற இடங்கள் 1220. அதாவது கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.

‘நீட்' பின் திரையில் இருக்கும் சதி இன்னமுமா புரியவில்லை? ‘நீட்' என்பது யார் வயிற்றில் அறுத்துக் கட்ட என்பது விளங்கவில்லையா?

‘நீட்' பயிற்சி மய்யங்களில் காசோ லையோ, வரைவோலையோ கொடுக்க முடியாது. எல்லாம் நேரிடைப் பணப் பரிவர்த்தனைதான் - வருமான வரித் துறையினரை ஏமாற்றிட!

பணம் உள்ளவர்களுக்குத்தான் மருத் துவக் கல்லூரியா? இவர்களுக்காகத்தான் ‘நீட்' கல்வியா?

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அர்த்தமுள்ள கேள்வி

மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் ஏழைகளுக்காகத் திறக்கப்படுவதில்லை. பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேரும் முறையை மாற்றிடவே ‘நீட்' தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், ‘நீட்' பயிற்சிக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப் படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முழு அதிருப்தியை அழுத் தமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.

‘‘கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை திரும்பப் பெறும் மத்திய அரசு ‘நீட்' தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை'' என்ற நியாயமான கேள் வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது? ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட சட்டங்களும் ‘‘கமுக்கமாக'' நிராகரிக்கப்பட்டதே ஒழுங்கு முறை யற்றது! தமிழ்நாடு அரசும் ஏன் மறைத்தது என்பது போன்ற கேள்விகள் சமூகநீதி யாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தீர்மானம் நிறை வேற்றப்படவேண்டும். அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள், சமூகநீதி காத்த வீராங்கனையாக அவர் செயல்பட்டதை மறந்தது ஏன்? ஏன்??

விரைவில் இதற்கொரு தீர்வு காண ப்படவேண்டும். சமூகநீதியாளர்களை ஒன்று திரட்டி, வீதிக்கு வந்து போராட திராவிடர் கழகம் தயங்காது, தயங்காது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

8.11.2019
http://viduthalai.in/e-paper/191001.html

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தளபதி மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழர் தலைவரை சந்தித்து தி.மு.க. தலைவர் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (11.11.2019) மாலை, திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னை அடையாறு, கஸ்தூரிபா நகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து,  அவரது
சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அடைவதிலும், தந்தை பெரியார் வழியில் ஆற்றி வரும் மனிதநேயத் தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேய  சங்கம் (American Humanist Association)  சார்பில்,  அவருக்கு  அளிக்கப்பட்ட  ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’  (Humanist Lifetime Achievement Award) பெற்றதற்கு தி.மு.க. சார்பில் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  ‘அமெரிக்காவில் பெரியார்' என்ற நூலினை  தமிழர் தலைவர், தளபதிக்கு வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு,  விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  க.பொன்முடி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு   ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, December 24, 2015

தந்தை பெரியாரின் 42-வது நினைவு நாள்(24-12-2015)!

சரித்திரம் மறைந்த செய்தி
தலைவரின் மரணசெய்தி!
விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியை கூறும் செய்தி!
நரித்தனம் கலங்க செய்த நாயகன் மரணசெய்தி!
மரித்தது பெரியாரல்ல
மாபெரும் தமிழர் வாழ்க்கை!
-பெரியார் மறைவுற்ற போது கவிஞர்  கண்ணதாசன் எழுதிய இரங்கல் கவிதை!
இன்று தந்தை பெரியாரின் 42-வது நினைவு நாள்(24-12-2015)!

Thursday, August 28, 2014

வீர தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் !

வீர தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் !

தமிழ் இனத்திற்கு நெருக்கடி எற்படும் போதேல்லாம் இன்னும் எத்தனை முத்து குமார் ,செங்கொடியை தீ -க்கு அளிப்பது ?

இனி ஒரு தமிழ் உயிர் கூட போககூடாது , நம் இலக்கை அடைய!



Friday, August 15, 2014

மரபணு பயிறும் - விளைவுகளும்


மரபணு பயிர் -க்கு மோடி அரசு  அனுமதி அளித்திருக்கிறது!!

முதலில் ஒரு விவசாயின் மகன் என்ற அடிபடையில் எனது  கடுமையாக  கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஏதோ இந்த பிரச்சனை விவசாயிகள் சார்ந்தது என்று மக்கள் ஒதுங்கி விட முடியாது , ஏன் என்றால் நீங்கள் தான் நுகர்வோர்கள்.

மரபணு பயிரிடம் விவசாயி தொடங்கி , அதை  உட்கொள்ளும் நுகர்வோர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வகையான ஒவ்வாமைகளை  எற்படுத்தும்.அதில் சிலவற்றை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன :

பிலிப்பைன்ஸ் தீவுகளில் சிடியோ கல்லாங்க் என்னும் கிராமத்தில் அரசு ஆதரவுடன் பி.டி.மக்காச் சோளம் விதைக்கப்பட்டது. பயிரின் பூக்கும் பருவத்திலேயே அதன் பாதிப்புத் தெரிந்தது. வயலில் வேலை செய்தவர்களுக்கும் அருகில் வசித்தவர்களுக்கும் காய்ச்சலும், முக வீக்கமும், மூச்சு திணறலும், இனம் தெரியாத அழுத்தமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது, பி.டி.மரபணு உருவாக்கும் நஞ்சை எதிர்க்கும் ராசாயனங்கள் இரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதே நிலைமை இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே நிர்மல் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டது. அதிக புரதம் தரும் பி.டி. சோயாவை பிரேசில் நாட்டில் உருவாக்கினர். இதனைப் பயன்படுத்தும்போது, வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, வலவீனம், தலைவலி போன்ற ஒவ்வாமை உண்டானதால் அவை உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.

தொடர்ந்து மரபணு மாற்று உணவை உட்கொண்டு வந்தால் சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) என்ற நோய் உருவாகும். இதனால் சிவப்பு அணுக்கள் வடிம் மாற்றம் அடைந்து, சிறிய ரத்தக் குழாய்களுக்குள் நுழைய முடியவில்லை என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.

அமெரிக்காவில், பேராசிரியர் பிரைன் டோக்கர், பி.டி. மரபணு தொழில்நுட்பத்தில் விளைந்த உருளைக் கிழங்குகளை உட்கொண்ட எலிகளுக்கு சிறுகுடல் செல்கள் சிதைந்து போயிருப்பதையும், செரிமான உணவுகளை உறிஞ்சும் உறிஞ்சிகள் அழுகிப் போய் இருப்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தார்.





உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் பி.டி. மரபணு பயிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உடல் நலக் கேடுகள் மட்டுமின்றி, இயற்கையின் உயிர்ச் சூழல் பண்மை அழிந்து, சுற்றுச் சூழலும் அழிந்துவிடும் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

எனவே மக்கள் அனைவரும் மரபணு பயிரை அனுமதிக்கும் மத்திய  அரசுக்கு  எதிராக கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.