விசாரணையும் தண்டனையும் தேவை மீண்டும் இந்த அவலங்கள் தொடரக் கூடாது!

சென்னை அய்.அய்.டி.யில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமையான பெண் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதரீதியான துன்புறுத்தல் காரணமாக சென்னை அய்.அய்.டி. (கேரளத்தைச் சார்ந்த) மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் கடந்த 4 நாட்களாக கேரளத்தில் பெரும் விவாதப் பொருளான நிலையில் தமிழகத்தில் தற்போது இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை அய்.அய்.டி யில் முதலாம் ஆண்டு முதுகலை வகுப்பில் பயின்று வந்த கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த சனிக்கிழமை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். தனது துறையில் இணைப் பேராசிரியராக உள்ள சுதர்ஷன் பத்மநாபன் தான், தனது மரணத்திற்குக் காரணம் என்று அவர் தனது தற்கொலைக் குறிப்பை கைப்பேசியில் பதிவிட்டுள்ளார்.
மாணவி பாத்திமா அறிவாற்றலில் சிறந்து விளங்கியவர் ஆவார். இதன் காரணமாக அய்.அய்.டி. நடத்திய நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாகத் தேர்வாகி முதுகலை மானுடவியல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பிலும் அவர் முதல் மாணவியாகத் திகழ்ந்தார் என்று அவரது துறைப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறுகையில், "தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர் கோழையாக இருந்ததில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அய்.அய்.டி.யில் ஜாதி - மத ரீதியான பாரபட்சம்!
சென்னை அய்.அய்.டியில் தொடரும் ஜாதி மற்றும் மத ரீதியான பாரபட்சத்தைப் பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் தரப்பினரிடமிருந்து பாத்திமா எதிர்க்கொண்டார் என்றும், தனது பெயர் முஸ்லிமாக இருந்ததே அங்கு பிரச்சினையாக இருப்பதாகத் தனது மகள் குறிப்பிட்டதாகவும் அவரது தந்தை அப்துல் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்! என்னே கொடுமை!!
ஒவ்வொரு தேர்விலும் ஒரு முஸ்லிம் மாணவி முதலிடம் பெறுவது அங்குள்ள பலருக்கும் ஒரு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் அப்துல் லத்தீப் குற்றஞ்சாட்டியுள்ளார். பேராசிரியர் சுதர்ஷன் பத்மநாபன் எடுக்கும் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்பட்டதையும், அதுகுறித்து துறைத் தலைவரிடம் பாத்திமா புகார் அளித்து பின்னர் அது திருத்தப்பட்டதையும் அப்துல் லத்தீப் எடுத்துக் காட்டுகிறார்.
தொடர்ச்சியாக சென்னை அய்.அய்.டி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலைப் படலம் ஏனோ தொடர்ந்து வருகிறது. பேராசிரியரின் பாகுபாட்டால் இந்த அய்.அய்.டி. மாணவி தற்கொலை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அய்.அய்.டி. என்றாலே பார்ப்பனர்கள் ராஜ்ஜியம் தானா? மற்றவர்கள் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதப்படாத அறிவிப்பு அங்கு உள்ளதா?
தகுதி - திறமை பற்றி தம்பட்டம் அடிக்கும் கூட்டம்
தேர்வுகளில் எல்லாம் முதல் மதிப்பெண் எடுத்த பெண்தான் பாத்திமா லத்தீப். தகுதி - திறமை பற்றி தம்பட்டம் அடிக்கும் கூட்டம் - தங்களைத்தவிர மற்றவர்கள் அவர்கள் கூறும் அந்தத் தகுதி திறமை உடையவராக இருந்தால் அதனை ஏற்க மாட்டார்களா? ஜீரணித்துக் கொள்ள மாட்டார்களா?
இது ஒன்றும் புதிதல்ல; அய்.அய்.டி.யிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும் தற்கொலை செய்து கொள்பவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர் களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சிறு பான்மையினராகவுமே இருப்பது ஏன்? ஏன்?
புதுடில்லி எய்ம்சில் கொல்லப்பட்ட திருப்பூர் சரவணன், தற்கொலைக்குத் தூண்டப்பட்டு பலியான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற சேலம் முத்துக்கிருஷ்ணன், அய்தராபாத் பல்கலைக் கழக ரோஹித் வேமுலா என்று நிறுவனப் படுகொலைக்கு இலக்கானவர்களின் பட்டியல் வருந்தத்தக்க வகையில் நீள்கிறது.
ஜாதி - மத வெறியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது
2007ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரை தாழ்த்தப்பட்ட (S.C.) சமூக மாணவர்கள் 23 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 2008ஆம் ஆண்டு பலியான அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் செந்தில்குமார் வழக்கு இன்னும் தொடக்க நிலையைக்கூட தாண்டவில்லை. சென்னை அய்.அய்.டி.யில் இவ்வாண்டே நான்கு மரணங்கள் இவ்வாறு நிகழ்ந்துள்ளன என்று சொல்லப்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்கூட நிகழக் கூடாத இத்தகைய மரணங்கள் நடந்ததாகத் தெரிகிறது. ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவர்களும் இத்தகைய நிகழ்வுகளில் பலிகடாக்கள் என்பது இம்மரணங்களுக்குப் பின்னால் உள்ள ஜாதி, மதவெறியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல, "சென்னை அய்.அய்.டி. என்ன மர்ம தேசமா?" ஆர்.எஸ்.எஸ். அக்கிரகார வளையமா?
மத்திய - மாநில அரசுகள் இதனை அலட்சியமாகக் கருதக் கூடாது - முடியாது. வீண்கெட்ட பெயரைத் தவிர்க்க முயலுங்கள்.
அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இத்தகைய நிலைமை நீடிப்பதற்கான முக்கியமான காரணம், பேராசிரியர், பணியாளர் நியமனங்களில் அங்கு இட ஒதுக்கீட்டின் படி பணியிடங்கள் நிரப்பப்படாதது தான்.
உரிய பிரதிநிதித்துவம் இல்லாமலும், ஆற்றுவார் - தேற்றுவாரில்லாமலும், வழிகாட்டவும், வலியைப் புரிந்து கொண்டு உடன்நின்று குரல்கொடுக்கவும் கூட இயலாமல் தனிமைப்படுத்தப்படும் பயத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களே தவிக்கும் நிலையே அய்.அய்டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது.
இரு மடங்கு அளவில் உயர் ஜாதியினர்....
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு, பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் படி முழுமையாக நிரப்பப்படுவதும் இப் பிரச்சினைகளைச் சரி செய்வதற்கான முக்கியமான தேவையாகும். பொதுப் போட்டி இடங்களையும் தாண்டி இருமடங்கு என்னும் அளவில் பார்ப்பன-உயர்ஜாதியினர் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (S.C.) - 1.62%, பழங்குடியினர் (S.T.) - 0.32%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.) - 9.41%; ஆனால், "உயர்ஜாதியினர்" - 88.3% பணியில் உள்ளனர்.
இணை பேராசிரியர்களில் தாழ்த்தப்பட்ட (S.C.) வகுப்பினர் - 2.2%, பழங்குடியினர் (S.T.) - 0.55%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.)- 10.61%; ஆனால் "உயர்ஜாதியினர்" - 87.15%
துணை பேராசிரியர்களில் தாழ்த்தப்பட்ட (S.C.) வகுப்பினர் - 2.04%, பழங்குடியினர் (S.T.) - 0.51%, பிற்படுத்தப்பட்டோர் (B.C.) - 9.18%; ஆனால் "உயர்ஜாதியினர்" - 86.7%
இப்படி 18 விழுக்காடு இருக்க வேண்டிய தாழ்த்தப்பட்ட (S.C.), வகுப்பினர் 2 விழுக்காடு அளவு கூட நிரப்பப்படவில்லை; 7.5% நிரப்பப்படவேண்டிய பழங்குடியினருக்கு (S.T.) அரை விழுக்காடு கூட பணி வழங்கப்படவில்லை. 27% பெற்றிருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் 10% கூட பணியமர்த்தப்படவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக நிரம்பிய "உயர்ஜாதியினர்" ஏறத்தாழ 87% இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்என்றால், இந்த சமூக நீதி மறுப்பு தானே உயிர்களைப் பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்பதை மறுக்க முடியுமா?
தமிழ்நாடு அரசு இதற்கு முதன்மையான அளவில் முக்கியத்துவம் கொடுத்து, உரிய முறையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவது அவசியமாகும். இல்லையெனில் போராட்டம் தவிர்க்கப்பட முடியாததே!
நீண்ட கால நோக்கில்....
நீண்ட கால நோக்கில் இப்பிரச்சினைகளை அணுகி, இனி கல்வி நிறுவனங்களுக்குள் இத்தகைய நிறுவனப்படுகொலைகள், தற்கொலைத் தூண்டுதல்கள், நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறையைக் காணவேண்டும். இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி!
மாணவர்களின் குறைகளை பேசிக் களையவும், மாணவர்களின் குரல்களை எடுத்துரைக்கவும், கல்வி நிறுவனம் - மாணவர் - பெற்றோர் என மூவருக்குமிடையிலான ஜனநாயகப் பூர்வமான தீர்வு மய்யங்கள் இல்லை என்பதே உண்மை. கவுன்சிலிங் மய்யங்கள் கண்துடைப்புக்குச் செயல்படாமல் தீர்க்கமாகப் பணியாற்றுவதும், மாணவர் பிரதிநிதிகள் கல்வி நிறுவனங்களின் குரலாக ஒலிக்காமல், மாணவர் குரலாக ஒலிப்பதும் அவசியம்.
கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15-11-2019
No comments:
Post a Comment