-தந்தை
பெரியார்
தலைவர் அவர்களே! தாய்மார்களே!! இந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வங்காள பாஷை
தெரி யாது. ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்யும் சக்தியும் இல்லை. ஆதலால்,
தமிழில் பேசுகிறேன். எனது காரியதரிசி தோழர் சி.என். அண்ணாதுரை அவர்கள்
பிரசங்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்.
புரட்சி என்றால் என்ன?
இன்று, இங்கு, புரட்சி நாள் என்பதன்
பேரால், இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறோம். புரட்சி என்றால் என்ன?
எதற்காக புரட்சி செய்வது? நாம் ஏன் அந்நாளைக் கொண்டாடு கிறோம்? இதிலிருந்து
நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன? என்பவைகளைப்பற்றி முதலில் பேசக்
கருதியிருக்கிறேன். பிறகு, ரஷிய புரட்சி நாளை ரஷியாவில் கொண்டாடியதைப்
பார்த்ததையும், மற்ற நாடுகளில் கொண்டாடப் பட்டதை பார்த்ததையும்பற்றி
பின்னால் சொல் லுகிறேன்.
ஒருதலை கீழான மாறுதலுக்குத்தான் புரட்சி
நாள் என்பது! ரஷியப் புரட்சி என்பது, கஷ்டப் பட்ட மக்கள், மேலும்
கஷ்டப்பட்டு தம் மக்களி டம் இருந்து விடுதலை பெற்றதற்கு ஆக கொண்டாடும்
விடுதலை நாள்!
அய்ரோப்பிய நாடுகளில் புரட்சி நாள் விழா
இது உலகில் எங்கும் கொண்டாடப்படுகிறது.
நான் கொஞ்ச நாட்களுக்கு முன், அய்ரோப்பிய நாட்டுக்குச் சென்றிருந்தபோது,
ரஷியாவில் பிப்ரவரி புரட்சி நாளும், மே ஒன்றாம் தேதி புரட்சி நாளும்
கொண்டாடப்பட்டது. அடுத்த மாதம் பெர்லினில் இருந்தேன். அங்கு ஜூன் மாதத்தில்
ஒரு புரட்சி நாள் கொண்டாடப்பட்டது. பிறகு லண்டன் சென்றேன். அங்கு ஜூலை
மாதத்தில் ஒரு பெரிய தொழிலாளர் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது.
அதைவிட பெரிதாக, பாரிசில் ஆகஸ்ட் மாதத்
தில் பிரஞ்சுப் புரட்சி நாள் கொண்டாடப் பட் டதைப் பார்த்தேன். அப்படியே
ஸ்பெயினுக்குப் போனபோது, அங்கும் ஒரு புரட்சி நாள் கொண்டாடினார்கள்.
இப்படியே உலகத்தில் பல இடங்களிலும்
கொண்டாடுகிறார்கள். நம் நாட்டிலும் புரட்சி நாள்கள் கொண்டாடப்படுகின்றன.
ஆனால், நம் நாட்டில் கொண்டாடப்படும் புரட்சி நாள்களை, புரட்சி நாள் என்று
சொல்லுவதில்லை. அவற்றைப் பண்டிகை என்றும், உற்சவம் என்றும் சொல்லிக்
கொண்டாடுகிறோம்.
திராவிடர்களை வென்ற நாள் புரட்சி!
இங்கு கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை
ஒரு புரட்சி நாள் கொண்டாட்டம்தான்! அது ஆரியர்கள், திராவிடர்களை வென்ற
நாளையும், திராவிட அரசனைக் கொன்ற நாளையும் கொண்டாடுவது! அதுபோலவே எங்கள்
நாட்டில் மற்றும் பல உற்சவங்கள் கொண்டாடுகிறார்கள். அவற்றுள் ஒரு உற்சவம்
சமணர்களை சைவர்கள் வென்று, சமணர்களை 10 ஆயிரக்கணக்கில் கழுவேற்றிக் கொன்ற
நாள் கொண்டாடப்படுவதாகும்.
இப்படி பல உண்டு. ஆகவே, புரட்சி என்றால், முதலாளிக்கும், தொழிலாளிக்கும் மாத்திரம் நடப்பது அல்ல!
ஓர் இனத்துக்கும், மற்றொரு இனத்துக்கும்,
ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும், ஒரு மதத்துக்கும் மற்றொரு
மதத்துக்கும், அரசனுக் கும், பிரஜைக்கும், இன்னும் ஒரு கொள்கைக்கும்
மற்றொரு கொள்கைக்கும், இப்படி பலவாறாக நடப்பதாகும். இதற்கு ரஷ்யாதான் முதல்
ஆதா ரம் என்று சொல்லமுடியாது. வெகுகாலமாக வெளிநாடுகளில் புரட்சி நாள்
கொண்டாட் டங்கள் நடந்து வருகின்றன.
கஷ்டங்களை ஒழிக்கவே புரட்சி
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டி
யதென்ன? நமக்குள்ள கஷ்டங்களை நீக்கிக் கொள்ள புரட்சி
செய்யவேண்டுமென்பதையும், அவைகள் என்னென்ன என்பதையும், அதை எப்படி
செய்யவேண்டுமென்பதையும், அதற்காக என்ன செய்யவேண்டுமென்பதையும் பற்றி
தெரிந்துகொள்வதையே நாம் இப்புரட்சி நாள் கொண்டாட்டத்தின் படிப்பினையாகக்
கொள்ள வேண்டும். புரட்சி என்றால் அதில் அடங்கி இருக்கும் உணர்ச்சி,
ஒற்றுமையேயாகும். அடுத்த பாகம், தியாக புத்தியேயாகும். அதற்கு அடுத்தது
சுயமரியாதையாகும். ஒற்றுமையும், தன்னல மறுப்பும், சுயமரியாதையும்
புரட்சியின் ஏ, பி, சி, டி. இந்த ஏ, பி, சி, டி கூட படிக்காதவன்
புரட்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவன்.
ரஷ்யாவைப் பார்த்து, நம் நாட்டில்,
புரட்சிக் காரர்கள் முதலாளி ஒழிக! தொழிலாளி வாழ்க! என்று கூப்பாடு
போடுகிறவர்கள், புரட்சியின் ஏ, பி, சி, டி படிக்காதவர்களேயாகும்.
பல தொல்லைகள்
நம் நாட்டில் ரஷ்யாவில் இல்லாத பல காரி யங்கள் புரட்சிக்கு விரோதமாக இருக்கின்றன.
மதத் தொல்லைகள் எவ்வளவு? இனத் தொல்லைகள்
எவ்வளவு? ஜாதித் தொல்லைகள் எவ்வளவு? கலை, பழக்க வழக்க, ஆகார, உடை
முதலியவைகள் எவ்வளவு? மூட நம்பிக்கை எவ்வளவு? இவைகளைப்பற்றி
சிந்திக்கிறோமா? இங்குள்ள புரட்சிக் கூப்பாட்டுக்காரர், தங்கள் மதங்களை
விட்டார்களா? இன உணர்ச்சியை, ஜாதியை, குறிப்பிட்ட கலை,பழக்க உணர்ச்சி களை
விட்டார்களா? தங்கள் சுயநலத்தை விட் டார்களா?
சுயமரியாதையை கவனிக்கிறார்களா? எவ்வித
பேதமில்லாமல் ஒற்றுமையாய் இருக் கிறார்களா? அவைகள் உள்ள நாட்டில் தான்
திடீரென்று முதலாளி - தொழிலாளி புரட்சி உண்டாக முடியும்; ராஜா பிரஜைகள்
புரட்சி கூட முடியும். நாம் அப்படிப்பட்ட புரட்சிக்கு விரோதமாய் இருக்கும்
தடைகளை நீக்க முதலில் புரட்சி செய்யவேண்டும்.
ஜாதி - மத - மூடநம்பிக்கை பீடைகள்
ஜாதி, மதம், மூட நம்பிக்கை ஆகியவைகள் நம்மை விட்டு ஒழியவேண்டும்.
முதலாவதாக, தொழிலாளிக்காவது இவை ஒழிந்ததா?
தொழிலாளர் தலைவர்களுக்காவது இவை ஒழிந்ததா? முக்கியமாக ஒருவரை ஒருவர்
ஆதிக்கம் செலுத்துவதும், சுரண்டுவதும் நம் நாட்டில் ஒழியவேண்டியதற்கு ஆகவே
புரட்சி அவசியமானது.
அது எந்தெந்த விதத்தில் ஆதிக்கம்
செலுத்தப்படுகிறது; யாரை யார் எந்தெந்த விதத்தில் சுரண்டுகிறார்கள்; என்பவை
களைப் பார்த்து, அவைகள் எல்லாவற்றையும் ஒழிக்க புரட்சி செய்யவேண்டும்.
அதுதான் நம் முடைய குறிக்கோள் வார்த்தையாக இருக்க வேண்டும். வாலிபர்கள் இதை
நன்றாய் உணரவேண்டும்.
முக்கிய படிப்பினை
புரட்சி நாள்கள் கொண்டாடுவதால் நமக்கு
ஏற்படவேண்டிய படிப்பினை இதுதான். முக்கியமாக புரட்சிக்காரனுக்கு பகுத்தறிவு
வேண்டும்; மூட நம்பிக்கை ஒழிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும்.
கடவுள் சொல்லை நம்பினவனோ கடவுள் கட்டளையை
எதிர்பார்ப்பவனோ, மனுதர்மக் காரனோ புரட்சிக்காரனோ ஆகமாட்டான். ரிஷிகளையும்,
முனிவர்களையும், மகாத்மாக் களையும் நம்புகிறவன் புரட்சிக்காரனாக மாட்டான்.
புரட்சித்தலைவர்களும் புரட்சி விருப்பமுடையவர்களும் மக்களுக்கு இதை
முதலில் கற்பிக்கவேண்டும்.
ஏனெனில், புரட்சித் தன்மை பொதுமக்கள்
லட்சியமாக இருக்கவேண்டும். மூட நம்பிக்கையை வைத்துக்கொண்டு, முதலாளி
பணத்தைப் பிடுங்கி, தொழிலாளிக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டால், புரட்சி
வெற்றி பெற்றுவிட்டதாக ஆகிவிடாது.
மூட நம்பிக்கை உள்ளவரை, பணம்,
முதலாளிக்குப் போய்ச் சேராவிட்டாலும், முதல் இல்லாத முதலாளி ஆகிய
கடவுளுக்கும், புரோகிதனுக்கும், மேல்ஜாதிக்காரனுக்கும் போய்ச்
சேர்ந்துவிடும். மூட நம்பிக்கை உள்ள மக்களைக் கொண்டு, புரட்சியைக்
காப்பாற்றும் பலமான ஸ்தாபனம் அமைக்க முடியாது.
ரஷ்யாவில் கண்ட காட்சிகள்
ரஷ்யாவின் முக்கியப் புரட்சி நாளாகிய மே 1
ஆம் தேதி நாளன்று நான் மாஸ்கோவில் இருந்தேன். சுமார் 15 லட்சம் ஜனங்கள்
காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை தெருக் களிலேயே இருந்தார்கள். ஒவ்வொரு
தொழில் காரரும் கூட்டம் கூட்டமாக தெருக்களில் கொடி யுடனும்,
பாட்டுக்களுடனும் நடித்துக்கொண்டே நகர்ந்த வண்ணமாக இருந்தார்கள். பெண்கள்
உற்சாகம் சொல்லி முடியாது. ஊர்வலத்தில், உண்மையில் 3, 4 மைல் நீளம் ஜனங்கள்
நிரம்பி வரிசையாக இருந்தார்கள்.
அதில் பல வேஷங் கள் சென்றன. பாதிரிகளும்,
முல்லாக்களும், புரோகிதர்களும் குருமார்களும்போல் வேஷம் போட்டு அவர்களைப்
போல் நடித்துக் காட்டிக் கொண்டே போனார்கள்.
முதலாளிகள், அரசர்கள், ஜமீன்தார்கள் போல
வேஷம் போட்டு நடித்துக்கொண்டே போனார் கள். பக்தர்கள், ஏழைகள், தொழில்
செய்பவர்கள், பிச்சைக்காரர்கள், கூலிக்காரர்கள் முதலிய வர்கள் போல் வேஷம்
போட்டுக்கொண்டு, அவர்களது கொடுமைகளை நடித்துக் காட்டிக் கொண்டே போனார்கள்.
மற்றும் சுகாதாரம், வைத்தியம்,
பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவைகளின் தன்மையையும், மூட நம்பிக்கை படம்
போடுதல், மந்திரித்தல், தீர்த்தம் கொடுத்தல், காதில் உபதேசித்தல், ஊதுதல்
ஆகியவைகளையும் நடித்துக் காட்டிக் கொண்டே போனார்கள்.
மூன்று மைல் உள்ள கூட்டம் 10, 15 மைலுக்கு
மேலாக நடந்துசென்று சிகப்பு சதுக்கத்தில் கூடினார்கள். பிறகு, மாலையில்
வெடிகளும், பாணங்களும், புகைக் கூண்டுகளும், விளக்கு களில் காட்சிகளும்,
குறிக்கோள் வார்த்தைகளும் காட்டப்பட்டன.
லெனின் சமாதி கட்டடத்தின்மீது, ஸ்டாலின்
முதலியவர்கள் நின்றுகொண்டு வேடிக்கைப் பார்த்து, வணக்கம் செலுத்திய
வண்ணமாய் இருந்தார்கள். அய்ந்து வயதுடைய சிறு குழந்தை களுக்கு எல்லாம்
புரட்சி என்றால் என்ன? முன் னிலை என்ன? பின் நிலை என்ன? என்பவை நன்றாகத்
தெரியும்.
எல்லாம் புரட்சி மயம்
அங்கு பாட்டு, நடிப்பு, டிராமா, சினிமா,
வேடிக்கை, சம்பாஷணை விகடம் எல்லாம் புரட்சி உணர்ச்சியை கொடுக்கக்
கூடியவைகளே யாகும். இங்கு, உங்கள் நாட்டில் நல்ல தலைவர் இருக்கிறார். தோழர்
ராய் அவர்கள், இவைகளை நன்றாய் உணர்ந்தவர்; புரட்சி நடத்தக் கூட இருந்தவர்;
ரஷிய மக்கள் பெரும்பாலோரால் புகழப்படுபவர்; தன்னலமற்றவர்; நல்ல பகுத்தறி
வாளி; நல்ல மூளையுள்ளவர்.
அவர், உண்மையில், மக்களை புரட்சிக்கு
அழைத்துப் போகத் தக்க சிப்பாய்! ஆதலால், அவரது பின் நின்று புரட்சிக்கு
பக்குவமடை யுங்கள்! எனக்கு இங்கு பேச சந்தர்ப்பம் கொடுத்ததற்கும், நீங்கள்
இவ்வளவு நேரம் இருந்து கேட்டதற்கும் நன்றி செலுத்துகிறேன்.
16.11.1941 ஆம் தேதி மாலை 6 மணிக்கு
கல்கத்தா சவுக் மைதானத்தில், நடந்த தோழர் ரஜினி முகர்ஜி தலைமையில், புரட்சி
நாள் கொண்டாட்டக் கூட்டத்தில் பெரியார் அவர்கள் உரை
- விடுதலை 19.11.1941